சனி, 13 ஏப்ரல், 2013

விஜய வருடப் பிறப்புக் கருமங்கள்


பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது வருடங்களுள் 26-ஆம் வருடமான நந்தன ஆண்டு நிறைவுற்று 27-ஆம் வருடமான விஜய வருடம் சித்திரை முதல் நாளில் தொடங்குகிறது. பங்குனி மாதம் 31ம் நாள் (13.04.2013) சனிக்கிழமை பிற்பகல் 11 மணி 58 நிமிடமும் கார்த்திகை நட்சத்திரத்தின் 4ம் பாதமும், பூர்வ பட்ச (வளர்பிறை)
சதுர்த்தசி திதியும் கூடிய சுப நேரத்தில்   புதிய “விஜய” வருடம் பிறக்கின்றது.

விஷ புண்ணிய காலம் :- சனிக்கிழமை முன்னிரவு 07 மணி 58 நிமிடம் முதல் பின் இரவு 03 மணி 58 நிமிடம் வரை.
மருத்து நீர் வைக்கும்போது தலையில் புங்கம் இலையும் காலில் ஆலிலை வைத்தும் குளிக்க வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள் :- கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிடம் 1ம், 2ம் பாதங்கள், உத்திரம், சித்திரை 3ம், 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதங்கள், உத்திராடம்.
கைவிசேஷம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்குரிய சுப நேரங்கள்.
கீழ் வரும் நேரங்கள் அனைத்தும் 14.04.2013 ஞாயிற்றுக்கிழமைக்கானது.
முற்பகல் :- 08 மணி 11 நிமிடம் முதல் 09 மணி 52 நிமிடம் வரை
10 மணி 04 நிமிடம் முதல் 12 மணி 03 நிமிடம் வரை
02 மணி 22 நிமிடம் முதல் 04 மணி 11 நிமிடம் வரை
08 மணி 25 நிமிடம் முதல் 09 மணி 04 நிமிடம் வரை.
பிற்பகல் :- 12 மணி 15 நிமிடம் முதல் 02 மணி 10 நிமிடம் வரை


எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான்.

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.

சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.

வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும் சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாட, தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக