வியாழன், 7 மார்ச், 2013

சர்வதேச மகளிர் தினம் பற்றி வெளியாகும் சிறப்புக் கட்டுரை


மனித வரலாற்று விருத்தியில் ஆண்,பெண் சாதி முறை பரினாம வளர்ச்சியில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆண்,பெண் ஆகிய இரு இனங்களும் சேர்ந்து உருவாக்கிய உயிர்ப்பே குடும்பம், சமூகம், நாடு என விரிவடைகின்றது. நாகரீகம் வளர்ச்சியடையாத காலப்பகுதியில் ஆண், பெண் என்ற வித்தியாசங்கள் பார்க்கப்படுவது அரிதாகவே இருந்தது. ஆனால் நாகரீக வளர்ச்சி நிலையில் பெண்களை
ஆண்களிருந்து வேறுபடுத்தி பார்க்கும் நிலை வளர்ச்சியடைய ஆரம்பித்தது. ஆண் என்பவன் பலம் பொருந்தியவன் என்றும், பெண் என்பவள் மென்மையானவள் என்றும் உளவியல் ரீதியில் பார்க்கப்பட்டதன் காரணமாக மேற்படி வேறுபாடு ஏற்படலாயிற்று. 

     ஆரம்ப காலத்தில் பெண் என்றால் ‘பேடி’ என்றும் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்றும் அகோர வார்த்தைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தனர். இத்தோடு பெண்ணானவள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு பொருட்டாகவும் கருதப்பட்டது. இக்காலத்தில் தோற்றம்பெற்ற இலக்கியங்கள் கூட பெண்களை இழிவாக கருதுகின்ற போக்கையே வெளிப்படுத்தி நிற்கின்றன. பெண்கள் தொடர்பான தவறான புரிதல், மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என்பனவே இதற்குரிய பிரதான காரணங்களாகும். இதன் வழியில் உருப்பெற்றதே ஆணாதிக்க சமூக விருத்தியாகும். ஆரம்ப காலங்களில் குடும்பத்தலைவன், சமூகத்தலைவன், ஆட்சித்தலைவன் போன்றோர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே காணப்பட்டன. இதனால் பெண் அடிமை இயல்பாகவே வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இந் நிலமை பூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்பதே மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆகும். 
     ஆரோக்கியமான சமூக விருத்தியில் பெண்களின் இருப்பு அவர்களின் தலைமைத்துவம் அவர்களின் சேவை என்பன அபிவிருத்தி சுட்டியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையை வெளிப்படுத்தும் பொருட்டு 19ம் நூற்றாண்டில்  இந்தியாவில் வாழ்ந்த எட்டய புரத்து எரிமலை கவிஞனான மகாகவி பாரதி வெளிப்படுத்தியிருந்தார். ‘புதுமைப்பெண்’கள் புதிய உலகின் பங்குதாரர்களாக மாறவேண்டும் என்றும் நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் பெண்களுக்கு வேண்டும் என்றும் ‘ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம்’ என்று பாட்டினிலே வீரத்தை பெண்களுக்கு விதைத்தார். இதேபோன்றே பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் மடமையை கொளுத்திடுவோம்’ என பெண்களை விழித்தௌச்செய்யும் வீரக் கவிதைகளின் ஊடாக பெண்களை விழித்தௌச் செய்தார். 
      இன்றய காலத்திலும் பெண்கள் உரிமை அவர்களின் பாதுகாப்பு எனப் பல விடயம் தொடர்பில் பலரால் பேசப்பட்டாலும் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்கப்படுவதும் ஆபாச பொருளாக பார்க்கப்படுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் பொருளாதார, அரசியல்,சமூக நிலைகளில் ஒதுக்கப்படுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவுக்கு அகிம்சை வழியில் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த மகாத்மாகாந்தி அவர்கள் ‘எப்போது எமது நாட்டில் பெண்கள் நல்லிரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரம் உருவாகும்’ என்றார். இதே போன்று ‘பெண் அடிமை தீரும் மட்டும் மண் விடுதலை என்பது முயற்கொம்பே’ என்றார் பாவேந்தர் அவர்கள். இதன் அடிப்படையில் பெண் அடிமைத்தனம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு அவமானம் காரணம் மனித சிருஷ்டிக்கு நிலைக்களம் பெண்தான். இதனால்தான் பெண் என்பதற்கு தாய்மை எனும் இன்னுமொரு பொதுப்பெயரும் உண்டு. பெண்ணால் மட்டுமே தாய்மை அடையும் பெருமையும் உண்டு. இதனால்தான் தாய்மண், தாய்நாடு, தாய்மொழி, என்றெல்லாம் பெண்ணின் இலக்கணம் பெருமை சேர்த்துள்ளது.
         இன்றைய தமிழ் சமூகத்தில் பெண்ணின் பெருமைகளை மதிக்கின்ற பண்பு ஓரளவு இருப்பினும் பெரும்பாலும் பெண்களை அடக்கி, ஒடுக்கி அதிகாரப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் நிலை கூடுதலாக காணப்படுகின்றது. மட்டக்களப்பில் குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தில் வீட்டு வன்முறைகளாலும் பொது இடங்களில் வேலைக்கு செல்வதனால் பெண்கள் பல துன்பங்களை அனுபவித்துகொண்டிருக்கின்றனர். இப்பிரதேசத்தில் உள்ள சில ஆண்கள் உழைத்து வரும் பணத்தின் பெரும்பகுதியை மது பாவனைக்காக செலவிடுவதன் மூலம் இவ்வாறான வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதைவிட பொருளாதார கஸ்ர நிலை காரணமாக பெண்கள் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதன் காரணமாக பெண்கள் வேலைத்தளங்களில் பல்வேறு இடர்களை சந்திக்கின்றனர். இவ்வாறான பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைகள், உரிமை மீறல்கள் களையப்படவேண்டுமாயின் பொதுவாக மனிதர்களின் மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியமாகும்.
          பெண்கள் தமது இருப்பு, பாதுகாப்பு சுதந்திரம் தொடர்பில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் எமது பிரதேசத்தில் வாழும் பெண்கள் தினமும் சவால்கள் நிறைந்த வாழ்வையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற பெண்கள் மற்றும் தொழில் இன்றியும் பொருளாதார வசதியின்றியும் உள்ள பெண்கள் எனப் பலர் வாழ்வதற்காக வாழ்கைப் போராட்டத்தை தினமும் எதிர்கொண்டவர்களாகவே வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமாயின் மனித மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதோடு எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய வகையில் தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.
-மாயன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக