புதன், 26 ஜூன், 2013

அரசடித்தீவு News வலையமைப்பின் ஓராண்டு நிறைவு தினத்தின் சிறப்புப் பார்வை.

-மாயன்-
உறவுகளின் தொடர்ச்சிக்கும் உணர்வுகளின் சங்கமத்திற்கும் நிலைக்களமாய் இருப்பவை மொழி எனும் ஊடகம் ஆகும். மொழியின் வல்லமையால் மனிதத்துவத்துள் மறைந்து கிடக்கும் மாண்புமிகு திறன்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான மொழி பயன்பாட்டை வெளிப்படுத்தி மனித உணர்வுகளின் பாதுகாவலனாக ஊடகங்கள் திகழ்கின்றன. இதன் வழியில் ஒரு சிறிய கைங்கரியத்தையாவது செயற்படுத்தும் வகையில் அரசடித்தீவு இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து arasadithivunews.blogspot.com  எனும் வலைப்பூவின் ஊடாக பாரிய பணியினை செய்துவருகின்றனர். மாற்றத்திற்கான சூழலை நோக்கிய சமூக உருவாக்கத்தின் பங்குதாரர்களின் ஒரு பகுதியாக இவ்வலையமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 2012.06.27 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அரசடித்தீவு கிராமத்தின் நிகழ்வுகளைத் தாங்கியதாக வெளிவந்த இவ்வலையமைப்பானது ஆறு மாதங்களாவதற்கு முன்னமே பிரதேசத்தின் பலரது பாராட்டுக்களையும்
வெளிநாடுகளில் தொழில் புரியும் எம் உறவுத் தோழர்களின் ஆலோசனைகளையும் பெற்ற நிலையில் பிரதேசத்தில் இடம் பெறுகின்ற நிகழ்வுகளையும் தாங்கியதாக வெளிவர ஆரம்பித்தது. குறுகிய பிரதேச உணர்வுடன் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலையமைப்பானது பரந்துபட்ட பரப்புக்களைத் தாங்கி வெளிவர ஆரம்பித்தவுடன் செய்திகளை சேகரிக்கவும் அவற்றை தொகுக்கவும் உறுப்பினர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர். முன்னனுபவம் எதுவும் இல்லாத நிலையில் தம்மிடமிருந்த ஆர்வத்தின் காரணமாகவும் விடாமுயற்சி காரணமாகவும் பலரிடம் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுத்தி வந்துள்ளனர். முக்கியமாக தமது குடும்ப சூழலிலும் கிராம சூழலிலும் பிரதேச சூழலிலும் நடக்கின்ற சம்பவங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முயற்சித்த வெளிநாடு சென்று தொழில் புரியும் பல்வேறு இளைஞர்களின் தவிப்புக்களின் பின்புலமே இவ்வலையமைப்பின் உருவாக்கத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத்தியது எனலாம்.
            
          எல்லாவிதமான தகவல் பரிமாற்றங்களுக்கும் மொழிதான் சிறந்த ஊடகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வலையமைப்பின் படைப்பாளிகளின் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். செய்தி ஆசிரியர்கள், கட்டுரை ஆசிரியர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். ஆனாலும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் ஆக்கங்களை பார்ப்பீர்களாயின் பல சிரமத்தின் மத்தியில் அவற்றை வெளியீட்டு கொண்டிருப்பதை நன்கு அறிவீர்கள். தமக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் தரவுகளை சேகரிப்பதும் அவற்றை தொகுத்து வலையமைப்பில் வெளியிடுவதுமாக வேலைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தனை காரியமும் ஓரிரு செயற்பாட்டாளர்களாலேயே இடம் பெற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமான விடயமாகும். இவ் வலையமைப்பில் பலர் இணைந்து கொண்டிருந்தாலும் அவர்களின் ஆக்கங்களும் உதவிகளும் தற்போதைய நிலையில் அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுக்கள் காரணமாக தொடர்ந்து இவ்வலையமைப்புக்கு கிடைக்கவில்லை.

            குடும்ப வறுமை காரணமாக எதிர்காலம் பற்றிய வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு உழைப்பிற்காக வெளிநாடு சென்று வாழும் எத்தனையே ஜீவன்களின் எண்ணத்து உணர்வுகளுக்கு ஒரு ஆறுதலையாவது வழங்கும் பணியினை இவ் வலையமைப்பு செய்வதையிட்டு பெருமைப்படுகின்றோம். சொந்தங்களின் சோகச் செய்திகளையும் தம் உறவுகளின் மங்கல நிகழ்வுகளையும் உடனுக்குடன் வலையமைப்பின் ஊடாக அறிந்து கொள்ளுவதோடு எமது கிராம, பிரதேசத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறியவும் முடிகின்றது. இவ்வலையமைப்பின் பயன்பாட்டை பொறுத்தமட்டில் எமது நாட்டில் மட்டுமன்றி இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளிலும், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வாசகர்கள் பயன்பெற்று வருகின்றமை சிறப்பான விடயமாகும். இதுவரையும் 8015 தடவைகள் வலையமைப்பினை தரிசித்துள்ளமை மற்றுமொருவிடயமாகும். 

         இவ்வலையமைப்பின் சேவையினை மேலும் விரிவு படுத்துவது சிறப்பானதாகும். இனிவரும் காலங்களில்  மாணவர்களுக்கு பயனுள்ள அறிவு ரீதியான விடயங்களும் எமது பண்பாட்டை பேணும் வகையிலான பல ஆக்கங்களும், வேலை வாய்ப்பு சம்பந்தமான பல விடயங்களும் வெளிவர உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே வாசகர்கள் அனைவரும் ஆக்கபூர்வமான தங்களின் கருத்துக்களை வழங்கி வலையமைப்பின் பயன்பாட்டையும் பெற்றுக்கொள்ளுவீர்கள் என எதிர்பார்கின்றோம். 

   

1 கருத்து: