திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பட்டிப்பளை அருள்மிகு புளியடி ஸ்ரீ வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் - 2013

ஈழமணித் திருநாட்டில் கிழக்கிலங்கையின் மீன் பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் தென்பால் தன்தோன்றி ஈசருறை நகரருகே மருதநிலம் வளம்கொழிக்க, வாவிமகள் அலங்கரிக்க வனம் சூழ்ந்து எழில் கொடுக்கும் பட்டிப் பெருக்கி பால், தயிர், நெய் சொரியும் பழம்பெரும் கிராமமாம்
பட்டிப்பளை தன்னில் பன்நெடுங்காலமாய் கோயில் கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் காவல் தெய்வமாம் புளியடி ஸ்ரீ வைரவர் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா, நிகழும் விஜய வருடம் ஆடித் திங்கள் 19ம் நாள் (2013.08.04) ஞாயிற்றுக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி ஆடித்திங்கள் 25ம் நாள் (2013.08.10) சனிக்கிழமை அம்மனுக்கான சர்க்கரை அமுது கொடுத்தலுடன் இனிது நிறைவு பெறும்.

ஆதியே யெங்களை யிரட்சிக்க வந்த நீ
அண்டபகி ரண்டமு மடுக்காய் நிறைந்த நீ
சோதியே சுடரொளிய தானதொரு கடவுள் நீ
துட்டவயி ரவர்கோடி சூழவரு பவரு நீ
நீதியே யுந்தனை நினைப்பவர் தனக்குமுன்
நிற்குமத கரிகளொரு திக்கிலோ டாதோ
ஊதிபம தானதொரு கண்கண்ட தெய்வமே
உன்னருள் புரிந்துதவு முண்மைநா யகனே

2013.8.04 ஞாயிற்றுக்கிழமை : பிற்பகல் கிரியைகள் ஆரம்பமாகி பின்னிரவு திருக்கும்பம் வைக்கும் நிகழ்வு நடைபெறும்.

2013.08.05 திங்கட்கிழமை : பகல் சடங்குடன் இரவுச் சடங்கும் நடைபெறும்.

2013.08.06 செவ்வாய்க்கிழமை : பகல் சடங்குடன் இரவுச் சடங்கும் நடைபெறும். அன்றிரவு ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மகரதோரண ஊர்வலமானது ஆரம்பமாகி மேளவாத்திய இசையுடனும், அடியார்களின் காவடி ஆட்டத்துடனும் ஆலயத்தை வந்தடையும்.

2013.08.07 புதன்கிழமை : பகல் சடங்குடன் இரவுச் சடங்கும் நடைபெறும். அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக கரகாட்டம் இடம்பெறும்.

2013.08.08 வியாழக்கிழமை : பகல் சடங்குடன் இரவுச் சடங்கும் நடைபெறும். அன்று பிற்பகல் 01.00 மணியளவில் காவடி, அலகு வேலாயுதம், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன் தீர்ப்பவர்கள் ஸ்ரீ மாவடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மேளவாத்திய இசையுடன் ஆலயத்தை வந்தடைவார். அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையில் இசை நிகழ்வு இடம்பெறும்.

2013.08.09 வெள்ளிக்கிழமை : பகல் சடங்குடன் இரவுச் சடங்கும் நடைபெறும். இரவுச் சடங்கின் சிறப்பம்சமாக பலிகரண நிகழ்வு நடைபெறும். அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக வெண்ணிலாவின் வண்ண இரவு நிகழ்ச்சி இடம்பெறும்.

2013.08.10 சனிக்கிழமை : மாலை அம்மனுக்கான சர்க்கரை அமுது கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.

வாருங்கள் வைரவர் ஆலயம் நாடி ! வணங்குங்கள் அவர் அருள் வேண்டி !!
வேணண்டும் வரம் பெற்றுச் செல்லுங்கள் தம் மனை நோக்கி !!!

இவ்வண்ணம்
ஆலய பரிபாலன சபையினரும்,
கிராம மக்களும். பட்டிப்பளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக