செவ்வாய், 26 மார்ச், 2013

பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் மாபெரும் விவாதப் போட்டி - 2013


பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமானது எதிர்வரும் 29, 30, 31 ஆகிய தினங்களில் நடாத்தவுள்ள “மண்கமழும் மங்கல விழா” வினை முன்னிட்டு பட்டிப்பளை கோட்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கான விவாதப்போட்டியை 26.03.2013 திகதி
அதாவது இன்று  மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தினுள் முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. பிரதேச மண் கலந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட இவ் விவாதப்போட்டி எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல பாடசாலைகள் பங்குபற்றி இருந்தன. இப் போட்டி நிகழ்வுக்கு உரிய பிரதம நடுவராக திரு. க. புவனசிங்கராசா அதிபர் அவர்களும் ஏனைய நடுவர்களாக பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளரான செல்வி சுதர்ஷினி மற்றும் உறுப்பினரான திரு சூரியகுமார் போன்றோர் கலந்துகொண்டனர்.

இவ்விவாத நிகழ்வின்போது

1) நமது பண்பாட்டைப் பேணுவதில் அதிக செல்வாக்கு செலுத்துவது கிராமியக் கலையா ? சினிமாக் கலையா ?

2) ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்தது கிராமமா ? நகரமா ?

3) நவீன இலத்திரனியல் சாதனங்களால் சமூகம் சீர்படுகின்றதா ? சீரழிகின்றதா ?

4) மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிகம் அக்கறை காட்டுவது பாடசாலைக் கல்வியிலா ? பிரத்தியேக கல்வியிலா ?

போன்ற தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு குலுக்கல் முறையில் தலைப்புக்கள் தெரிவுசெய்யப்பட்டு தயார்படுத்தலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இவ் விவாதப்போட்டி இடம்பெற்றது. இதில் இரண்டு சுற்றுப் போட்டிகள் இடம் பொற்று முடிந்துள்ள நிலையில்  இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது. இதில் இறுதிப்போட்டிக்காக மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அணியினரும் மட்/ முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய அணியினரும் பங்குபற்ற உள்ளனர். இத்தோடு மூன்றாம் இடத்தை தெரிவுசெய்யும் பொருட்டு மட்/முதலைக்குடா மகா வித்தியாலய அணியினரும் மட்/ மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினரும் போட்டியிடுகின்றனர். இவ் இறுதிச் சுற்றுப்போட்டிக்குரிய பிரதம நடுவராக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிகல்வி பணிப்பாளர் திரு. ஸ்ரீநேசன் அவர்களும் உதவி நடுவர்களாக பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கவிஞர் மேரா, செயலாளர் செல்வி சுதர்ஷினி அவர்களும் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள், இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி எமது சமூகம் பற்றிய புரிதலையும் எதிர்காலத்தில் எம்மவரை புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுத்தவும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக