செவ்வாய், 18 ஜூன், 2013

அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத் திருச்சடங்கு 2013

வீரம் விளைந்த எங்கள் மீன்பாடும் தேநாட்டில் போரோய்ந்து எங்கள் புனித மண் எழுச்சி பெற்று பச்சை வயல் வெளியும், பனந்தோப்பு சோலைகளும், குறிஞ்சி நில குமரன் வீற்றிருக்கும் குன்றுகளும், மருத நிலம் சூழ்ந்து வனப்பூட்டும் பொய்கைகளும், கல்மாடு புல் தின்று கணப்பொழுதில்
வெள்ளையனை நில்லாது துரத்தி நிலையாகக் குடியமர்ந்த தான்தோன்றி அப்பனுக்கு அருகிலே இருந்து அருளாட்சி செய்கின்ற அரசடித்தீவில் உறை ஸ்ரீ முத்துமாரி அயம்மனுக்கு வருடாந்த உற்சவப் பெரு விழா விஜய வருடம் ஆணி மாதம் 16.06.2013 ம் திகதி  (2ம் நாள்) ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கும்பம் வைத்தலோடு ஆரம்பமாகி 23.06.2013ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீமிதிப்பும், திருக்குளிர்த்தியும் அதனைத் தொடர்ந்து  இடம் பெறும் தீர்த்தோற்சவத்துடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறும். 

வங்கக் கடல் இசைக்க
வாவி மகள் நடனமாட
தங்கத் தமிழ் மணக்க
தான்தோன்றி அப்பர் மண்ணில்
வீற்றிருந்து அருள் பாலிக்கும்
வீர மாரித் தாயாரை நாம்
போற்றித் தினம் பாடுகின்றோம்
புனிதமான அரசையூரில்..

  • 19.06.2013 4ம் நாள் பகல் சடங்கும் அம்மன் வீதி ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து கூட்டு வளிபாடும், இரவுச் சடங்கும் இடம்பெறும். அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக “துரோணர் வில்வித்தை’’ வடமோடி நாட்டுக்கூத்து இடம்பெறும்.
  • 20.06.2013 5ம் நாள் பகல் சடங்கும் அம்மன் வீதி ஊர்வலமும், அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்றமும், அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் கலை நிகழ்வும் இடம்பெறும். தொடர்ந்து இரவுச் சடங்கு இடம்பெறும்.
  • 21.06.2013 6ம் நாள் பகல் சடங்கும் அம்மன் வீதி ஊர்வலமும் இடம்பெறும். அன்றிரவு தவநிலை சடங்கு இடம்பெறும்.  அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா பணியாளர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் கலைக்கோலமும் இடம்பெறும்.
  • 22.06.2013  7ம் நாள் பகல் 10.00 மணிக்கு ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீக்கட்டை எழுந்தருள பண்ணலுடன் மேளவாத்தியங்களுடனான ஆனந்தக் காவடிகளும், அடியார்களின் கற்பூர சட்டி எடுத்தலும் மற்றும் நேர்த்திக் கடன் நிகழ்வுகளும் ஆலயத்தை வந்தடையும். அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக அரசடித்தீவு இளங்கதிர் கலாமன்றத்தின் 38வது ஆண்டு விழாவும் கலை நிகழ்வுகளும் இடம்பெறும். 
  • 23.06.2013 அதிகாலை தீமிதிப்பு வைபவமும் பள்ளயச் சடங்கும் திருக்குளிர்த்தியும் தொடர்ந்து தீர்த்தோற்சவத்துடன் சடங்குகள் அனைத்து நிகழ்வும் இனிதே நிறைவு பெறும்.

உற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக